அருமனை:
இடைக்கோடு பேரூராட்சி கூட்டம் தலைவர் உமாதேவி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள் புறக்கணிக்கப்படுகிறது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கைகள் ஏற்கப்படாமல் கூட்டம் முடிக்கப்பட்டது. இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இடைக்கோடுபேரூராட்சியில் கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள் கட்டுவதற்கு மதிப்பீட்டுத் தொகை உயர்த்தி போடப்பட்டுள்ளதாகவும், பேரூராட்சியில் இதுவரை மேற்கொண்ட சாலைகள் இதரப் பணிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மதியம் பேரூராட்சி வளாகத்தில் அவர்கள் கஞ்சி காய்ச்சி குடித்து விட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அவர்கள் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.