தொடர் மழையால் பருத்தி செடிகள் அழுகின
கூத்தாநல்லூர் பகுதியில் தொடர் மழையால் பருத்தி செடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதியில் தொடர் மழையால் பருத்தி செடிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் நெல் மற்றும் உளுந்து, பயறு அறுவடைக்கு பிறகு மாற்றுப்பயிராக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக பருத்தி பஞ்சுகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில விவசாயிகள் பருத்தி அறுவடை பணியை முழுமையாக முடித்து விட்டனர்.
செடிகள் அழுகின
பல இடங்களில் தற்போது வரை பருத்தி பஞ்சுகள் அறுவடை பணி நடைபெறவில்லை. இந்த நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை ெபய்தது.
பருத்தி வயல்களில் மழைநீர் தேங்கி நின்றதால் ஈரப்பதத்தை தாக்குப்பிடிக்க முடியாத பருத்தி செடிகள் அழுகி விட்டன. இதனால் பருத்தி பஞ்சுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விவசாயிகள் கவலை
மேலும், பருத்தி காய்கள் பூக்கும் தன்மையும் குறைந்து வருகிறது. செடிகள் அழுகியதால் பருத்தி மகசூல் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
---