பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்
திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.;
திருமருகல் ஒன்றியத்தில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெற்களஞ்சியம்
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) தமிழகத்தின் நெற்களஞ்சியமாகும். இங்கு நெற்பயிர் பாரம்பரியமாக பயிரிடப்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் காரணமாக நெல் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பிரச்சினையின்றி விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பருத்தி சாகுபடி
நெல் சாகுபடிக்கு அடுத்து வாழை, கரும்பு, தென்னை போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டு வருகிறது. அதேபோல சமீப காலமாக பருத்தி பயிர் மீதான ஆர்வமும் விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா காலத்தில் முன்பு கோடை காலத்திலும் நிலத்தடி நீரை பயன்படுத்தி நெல், உளுந்து மற்றும் பயறு வகை பயிர்கள் பயிரிடப்பட்டு வந்தது. தற்போது இதற்கு மாற்றாக பருத்தி பயிரிடப்படுகிறது.
நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான திருமருகல் ஒன்றியத்தில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் முப்போகம் நெல் சாகுபடி செய்வது வழக்கம்.
5 ஆயிரம் எக்டேர்
கடந்த சில ஆண்டுகளாக பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் குறைந்த அளவு தண்ணீரில் வளரக்கூடிய பருத்தியை சாகுபடி செய்ய திருமருகல் பகுதி விவசாயிகள் திட்டமிட்டனர்.
இதனையடுத்து ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து திருமருகல் ஒன்றியத்தில் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.