ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசை இடித்து அகற்றம்

மத்தூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசையை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.

Update: 2022-10-26 18:45 GMT

மத்தூர்:

மத்தூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசையை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.

ஆக்கிரமிப்பு

மத்தூர் அருகே கவுண்டனூர் ஊராட்சிக்கு சொந்தமாக அரசு புறம்போக்கு நிலம் பெங்களூரு-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பெனுகுண்டபுரம் ஏரி உள்ளது. இந்த நிலத்தை ஒட்டப்பட்டியை சேர்ந்த மஞ்சுளா ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். மேலும் அவர், நிலத்தின் மத்தியில் குடிசை ஒன்றை கட்டி இதில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் வருவாய்த்துறை அலுவலர்கள் குடிசை, விவசாய நிலமும் அரசிற்கு சொந்தமானது. இவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என கூறி பலமுறை நோட்டீஸ் வழங்கினர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர் இடத்தை காலி செய்யவில்லை.

வாக்குவாதம்

இதையடுத்து போச்சம்பள்ளி தாசில்தார் திலகம், மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார், வருவாய்த்துறையினர் நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட குடிசை, நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்ற சென்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது போலீசாருக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடிசையை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்