மாநகராட்சி, நகராட்சி கடைகளுக்கு கால அவகாசம் கொடுக்க முடியாது
வாடகை பாக்கி செலுத்தாத மாநகராட்சி, நகராட்சி கடைகளுக்கு கால அவகாசம் கொடுக்க முடியாது என்று வேலூரில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.;
வாடகை பாக்கி செலுத்தாத மாநகராட்சி, நகராட்சி கடைகளுக்கு கால அவகாசம் கொடுக்க முடியாது என்று வேலூரில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஆய்வு கூட்டம்
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் நகராட்சி நிர்வாகத்துறையின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர்கள் குமாரவேல்பாண்டியன், பாஸ்கரபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஜே.எல்.ஈஸ்வரப்பன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, கைத்தறி துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டு வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகள்துறை கமிஷனர் செல்வராஜ், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
கால அவகாசம் வழங்க முடியாது
மாநகராட்சி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலத்தில் எடுத்த பலர் வாடகை பாக்கி வைத்துள்ளனர். தனியார் கடைகளை விட மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் குறைந்தஅளவே வாடகை வசூல் செய்யப்படுகிறது. எனவே வாடகை பாக்கி செலுத்தாத கடைக்காரர்கள் கட்டாயம் பணம் செலுத்தி தான் ஆக வேண்டும். அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க முடியாது. நகராட்சி துறையில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பணம் இல்லை. வாடகை பாக்கியை செலுத்துவது வியாபாரிகளுக்கு சிரமமாக இருந்தாலும் வியாபாரம் செய்பவர்கள் பணத்தை செலுத்தி தான் ஆக வேண்டும். இது தவிர்க்க முடியாது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கிடப்பில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்கவும், ஒப்பந்ததாரர்களை வேலை வாங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஜூன் மாதத்திற்குள்
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சரியாக பணி செய்யாதவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். தூய்மை பணியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை வாங்கி வருகிறோம்.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் சாலைகளை சரி செய்ய ரூ.25 கோடி சிறப்பு நிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டு பெற்றுத்தரப்படும். அதன்பின்னர் வேலூர் மாநகராட்சியில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ்நிலையம் மீண்டும் நகராட்சிக்குள் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார்.