ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உள்பட்ட கந்தசாமி 2-வது வீதியில் ஒரு குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மதியம் சம்பந்தப்பட்ட குடோனுக்கு நேரில் ஆய்வு செய்வதற்காக சென்றனர்.
அப்போது அந்த குடோன் பூட்டப்பட்டு கிடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் முன்னிலையில் குடோனை திறக்க வேண்டும் என்றுக்கூறி அந்த குடோனுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், அறிவிப்பை மீறி குடோனை திறந்தால் கோர்ட்டு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை நோட்டீசு குடோன் முன்பு ஒட்டப்பட்டது.
500 கிலோ
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாநகராட்சி 4-ம் மண்டல சுகாதார அதிகாரி ஜாகிர் உசேன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட குடோனை திறந்து என்னென்ன பொருட்கள் உள்ளன என்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 500 கிலோ எடை உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. குடோனின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.