ஈரோடு மாநகராட்சியில் 26 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் காலை உணவு- தட்டுகளை கழுவ மாட்டோம் எனக்கூறிய பணியாளர்களுக்கு ஆணையாளர் அறிவுரை

ஈரோடு மாநகராட்சியில் 26 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு குழந்தைகள் சாப்பிட்ட தட்டுகளை கழுவமாட்டோம் எனக்கூறிய பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.

Update: 2022-09-15 21:13 GMT

ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் 26 பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு குழந்தைகள் சாப்பிட்ட தட்டுகளை கழுவமாட்டோம் எனக்கூறிய பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை வழங்கினார்.

காலை உணவு

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அண்ணா பிறந்தநாளான நேற்று மதுரையில் அவர் தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக மாநகராட்சி அளவில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தேர்ந்து எடுக்கப்பட்ட அனைத்து பள்ளிக்கூடங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

ஈரோட்டில்...

ஈரோடு மாநகராட்சியில் 26 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 2 ஆயிரத்து 649 மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக கருங்கல்பாளையம் காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் கட்டப்பட்டு இருக்கிறது. இங்கிருந்து காலையில் உணவுகள் சம்பந்தப்பட்ட 26 பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

அங்கு ஒப்பந்த பணியாளர்கள் குழந்தைகளுக்கு உணவுகளை பரிமாறுகிறார்கள். சாப்பிட்ட தட்டுகளையும் அவர்கள் கழுவி அந்தந்த பள்ளிக்கூடங்களிலேயே வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காலை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கென தட்டு மற்றும் டம்ளர்கள் அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆணையாளர் அறிவுரை

காலை உணவு வழங்கும் திட்டத்தை சிக்கலின்றி செயல்படுத்தும் வகையில் நேற்று ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காலை உணவு திட்டத்தில் பணியாற்ற உள்ள சுயநிதிக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுயநிதிக்குழு உறுப்பினர்கள் சார்பில் பேசிய சிலர், குழந்தைகள் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைக்கமாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் அறிவுரை வழங்கி பேசினார். மாநகராட்சி மூலம் காலை உணவு வழங்கும் திட்டத்துக்காக ஒப்பந்த அடிப்படையில் நீங்கள் பணியில் சேர்ந்து இருக்கிறீர்கள். அரசின் திட்டத்தை நிறைவேற்றும் அரசுப்பணியாளர்களாக நீங்கள் மாறி இருக்கிறீர்கள்.

இந்த பணியில் சேரும்போதே, திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும். எனவே குழந்தைகள் சாப்பிட்ட தட்டுகளை கண்டிப்பாக கழுவி வைக்க வேண்டியது உங்கள் பணிதான். யாரேனும் செய்ய முடியாது என்றால் இப்போதே பணியை விட்டு சென்று விடலாம். இவ்வாறு அறிவுரையுடன் சற்று எச்சரிக்கையும் கலந்து ஆணையாளர் சிவக்குமார் கூறினார். அதைத்தொடர்ந்து பணியாளர்கள் வேலையை செய்வதாக ஒப்புக்கொண்டனர். இதனால் கூட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்