திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்நடக்கிறது;
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 12 வயதுக்கு மேற்பட்ட 23 லட்சத்து 46 ஆயிரத்து 968 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 20 லட்சத்து 95 ஆயிரத்து 678 பேர் இரு தவணை தடுப்பூசியும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 837 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 89 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
37-வது சுற்றாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி திருச்சி மாநகரில் 600 இடங்கள், புறநகரில் 1,220 இடங்கள் மற்றும் 11 அரசு ஆஸ்பத்திரிகள் என்று மாவட்டம் முழுவதும் 1,831 இடங்களில் இந்த முகாம் நடைபெற உள்ளது. முழுதவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும். எனவே இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்த வேண்டியவர்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.
இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.