பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.;
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கொண்ட குழுவினர் தனியார் பள்ளிகளில் படிக்கும் 12 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி போட்டனர். குழுவினர் ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் சென்று தடுப்பூசி போடாத மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டனர். மாணவ-மாணவிகள் அவர்களுடைய விருப்பப்படி கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.
இதேபோல் நொய்யல் அருகே வேட்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 4 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 144 தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று 144 தீணைப்பு வீரர்களுக்கும் மற்றும் பயிற்சி அளிக்கும் 30 தீயணைப்பு அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார செவிலியர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு அனைவருக்கும், கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுத்தனர். பின்னர் அவற்றை பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பின் அவர்களை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள வார்டில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.