நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்த நிலையில், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.;

Update: 2023-04-10 20:30 GMT

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்த நிலையில், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

மீண்டும் அதிகரிக்கும் தொற்று

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நெல்லையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பெண் கைதி ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவி தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்பத்திரிகளில் 2 நாட்கள் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த உத்தரவிடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்தால், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கும் வகையிலும், அங்கு போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையை சோதித்து அறிவதற்காக இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது.

கொரோனா தடுப்பு ஒத்திகை

அதன்படி நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் டீன் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் நேற்று நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளில் கொரோனா பரவலின்போது, தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக 3 ஆயிரம் படுக்கைகள் வரை தயார் செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 1,100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் நிரந்தர கொரோனா வார்டாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த வார்டில் நேற்று ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் மற்ற அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை) ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்