சரியான வழிகாட்டுதலை வழங்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
கோவை
அரசு பள்ளி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பயிற்சி முகாம்
தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கி சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் கல்வி கடன் பெற்று கொடுத்தல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், கோவை நிர்மலா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
முகாமில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:- கோவை மாவட்டத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சமூகத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஒருங்கிணைந்து செயல்படுங்கள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும், அதற்கான திறமைகளை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் போன்ற வழிகாட்டுதல்களை நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வழங்க வேண்டும்.
சரியான வழிகாட்டுதலை வழங்குவதால் எதிர்காலத்தில் திறமைகளை மேம்படுத்தி முன்னேற்றமடைய வாய்ப்பாக அமையும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். வருங்காலம் சிறப்பாக அமையும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) பாண்டியராஜன், முன்னாள் முன்னோடி வங்கி மேலாளர் வணங்காமுடி, நிர்மலா கல்லூரி முதல்வர் ஜி.எஸ்.மேரி பாபிலோ, அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 250 தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.