ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் - கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-02-05 08:48 GMT

திருவொற்றியூர் தனியார் பள்ளியின் 19-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நல்லி குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள். ரூ.11,618 கோடி கூட்டுறவு கடன்கள் இதுவரை விவசாயிகளுக்கு அரசு வழங்கி உள்ளது.

4,800 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அரிசி கடத்தல் கணிசமாக குறைந்த நிலையிலும், மேலும் கட்டுப்படுத்த கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அரிசி கடத்தல் வழக்கில் 132 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே சமயத்தில் பொதுமக்களும் இலவசமாக கொடுக்கும் அரசு அரிசியை விற்கக் கூடாது என்ற விழிப்புணர்வு வேண்டும். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு சில இடங்களில் கோதுமை தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். 10 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை கொள்முதல் செய்ய இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

அவ்வாறு கோதுமை வந்துவிட்டால் கோதுமை தட்டுப்பாடு விரைவில் நீங்கும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்