சேலம் மாநகராட்சி பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்ட பயன்பாடற்ற டயர்களை மேயர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் உபயோகித்திற்காக வைத்திருக்கும் தண்ணீரை சேமிக்கும் கலன்களை கொசுக்கள் புகுந்து முட்டையிடாதவாறு முழுமையாக மூடிவைக்க வேண்டும். மலேரியா பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மூலம் வீடுதோறும் சென்று டயர், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் அகற்றப்படுகிறது. டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகளுக்கு தேவையான பிளீச்சிங் பவுடர் மற்றும் கொசு ஒழிப்புக்கு தேவையான மருத்துகள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே தொற்று நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வில் மாநகர அலுவலர் யோகானந்த், செயற்பொறியாளர் திலகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்