வேளாண்கருவிகளை வாடகைக்குவிடும் திட்டத்தை கைவிட வேண்டும்

Update: 2023-09-25 16:46 GMT


தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம், திருப்பூர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையில் மாவட்ட செயலாளர் பாஷா, பொருளாளர் சண்முகவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் இணைந்து கூட்டுறவு வங்கிகளின் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிா்க்கடன், மத்தியகாலக்கடன், பொருளீட்டு கடன், பண்ணைசாராக்கடன் வழங்கப்படுகிறது. பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை பெற்று நகைக்கடன், வீட்டுவசதி கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் உள்பட பல கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடன், பொது நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்வதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டி வருமான இழப்பு ஏற்பட்டு கடும் நிதிநெருக்கடியில் உள்ளன.

ஒவ்வொரு சங்கமும் வேளாண்மை கருவிகளை ரூ.10 லட்சத்திற்கும் மேல் கொள்முதல் செய்து வாடகைக்கு விட நிர்பந்தமும், நெருக்கடியும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மூலமாக தரப்படுகிறது. ஏற்கனவே இப்பணியை செய்து வந்த வேளாண்மை பொறியியல் கூட்டுறவு சங்கங்கள் தொடர் நஷ்டத்தால் மூடப்பட்ட நிலையில் இப்பணியினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மீது திணிக்கின்றனர். எனவே இத்திட்டத்தினை கைவிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஏற்கனவே கொள்முதல் செய்த வேளாண்மை கருவிகளை மண்டல இணைப்பதிவாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு வருகிற 3-ந் தேதி முதல் அனைத்து பணியாளர்களும் தொடர் விடுப்பில் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்