கருத்தராவுத்தர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
உத்தமபாளையத்தில் உள்ள கருத்தராவுத்தர் கவுதியா கல்லூரியில் 2021-22-ம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரி தாளாளரும், செயலாளருமான தர்வேஸ் முகைதீன் தலைமை தாங்கினார். கல்லூரி மேலாண்மை குழு தலைவர் முகமது மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் முகமது மீரான் வரவேற்றார். இதில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் கழக தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 914 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், சமுதாயம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது கடமையையும், பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்றார்.
இந்த விழாவில் 731 பேர் இளங்கலை பட்டப்படிப்புகளிலும், 165 பேர் முதுகலை பட்டப்படிப்புகளிலும், 18 பேர் நிறைஞர் பட்டப்படிப்புகளில் பட்டம் பெற்றனர். முன்னதாக கல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், தங்களது துறைகளில் பட்டம் பெறும் மாணவர்களை மேடைக்கு அழைத்து வந்தனர். முடிவில் பட்டம் பெற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதில், கல்லூரி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.