குமரி மாணவரை விஷம் கொடுத்து காதலி கொன்ற விவகாரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசும் ஆடியோ வெளியானதால் சர்ச்சை;விசாரணை நடத்தப்படும் என கேரள மந்திரி தகவல்
காதலனை கொன்றதாக மாணவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இன்ஸ்பெக்டர் பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மந்திரி ஆன்றனிராஜூ தெரிவித்துள்ளார்.
காதலனை கொன்றதாக மாணவி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இன்ஸ்பெக்டர் பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மந்திரி ஆன்றனிராஜூ தெரிவித்துள்ளார்.
மாணவன் சாவு
கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
இவரும், தக்கலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர். இவருடைய சொந்த ஊர் ராமவர்மன்சிறை. இந்தநிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி அன்று காதலியை பார்க்க ஷாரோன்ராஜ் அவருடைய வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு ஷாரோன்ராஜ் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் படிப்படியாக அவருடைய உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமாக மாறி உயிரிழந்தார்.
காதலி கொன்றது அம்பலம்
இதுகுறித்து ஷாரோன்ராஜின் தந்தை ஜெயராஜன் பாறசாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், காதலி மற்றும் அவருடைய குடும்பத்தினர் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றிருக்கலாம் என புகார் தெரிவித்தார். ஆனால் பல நாட்களாகியும் இந்த வழக்கில் பாறசாலை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி கடந்த 30-ந் தேதி அன்று காதலி கிரீஷ்மா மற்றும் அவருடைய தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் மற்றும் அவருடைய தந்தை ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கிரீஷ்மாவிடம் நடத்திய விசாரணையில் காதலனுக்கு கசாயத்தில் அவரே விஷத்தை கலந்து கொடுத்து தீர்த்துக் கட்டிய திடுக்கிடும் தகவல் அம்பலமானது.
பரபரப்பு தகவல்
அதாவது ஷாரோன்ராஜை காதலித்து வந்த கிரீஷ்மாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மனதை மாற்றியுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக கிரீஷ்மாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. இதனால் கிரீஷ்மா, காதலனுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். எனினும் காதலித்த போது இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் ஷாரோன்ராஜ் இடம் இருந்தது.
அந்த புகைப்படங்கள் வருங்கால கணவரான ராணுவ வீரரின் கையில் கிடைத்தால் என்ன செய்வது? தன்னுடைய திருமண வாழ்க்கைக்கு அது இடைஞ்சலாக இருக்கும் என கிரீஷ்மா நினைத்துள்ளார். இதனால் மீண்டும் ஷாரோன்ராஜிடம் இனிக்க, இனிக்க பேசி பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வரவழைத்து கொன்று விட முடிவு செய்தார்.
கைது
அதன்படி கசாயத்தில் விஷத்தை கலந்து கொடுத்து ஷாரோன்ராஜை குடிக்க செய்தார். அப்போது கசாயம் கசக்கிறதே என காதலன் கூறியதும், அதற்கு தான் குளிர்பானம் இருக்கிறதே? என கூறி அதனையும் கொடுத்துள்ளார்.
காதலியின் பேச்சை முழுமையாக நம்பியதால் அதுவே ஷாரோன்ராஜ் உயிர் பறிபோவதற்கு காரணமாக அமைந்து விட்டது. மெல்ல, மெல்ல சாகடிக்கும் விஷத்தை கொடுத்து காதலனை தான் நினைத்த மாதிரி கிரீஷ்மா கொன்றார்.
முதலில் முன்னுக்கு பின் முரணாக போலீஸ் விசாரணையில் கிரீஷ்மா தெரிவித்தார். பின்னர் நடத்திய 8 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் கொன்றதை ஒப்புக் கொண்டார். இதனை வாக்குமூலமாகவும் கிரீஷ்மா போலீசாரிடம் தெரிவித்தார்.
தற்கொலை முயற்சி
இதனை தொடர்ந்து போலீசார் கிரீஷ்மாைவ கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட போது நெடுமங்காடு புறநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கழிவறையில் கிரீஷ்மா கிருமிநாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த வழக்கில் தடயங்களை அழிக்க உதவியதாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரையும் கைது செய்தனர். சிந்து அட்டகுளங்கரை பெண்கள் சிறையிலும், நிர்மல்குமார் நெய்யாற்றின்கரை சிறையிலும் நேற்று அடைக்கப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் சர்ச்சை பேச்சு
இந்த வழக்கின் விசாரணையை பாறசாலை போலீசார் முறையாக நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக பாறசாலை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஹேமந்த் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் அவர் கூறியதாவது:-
ஆடியோ விவரம்
மர்மமான முறையில் ஒரு வாலிபர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கடந்த மாதம் 19-ந் தேதி மருத்துவக்கல்லூரி போலீசில் இருந்து எங்களுக்கு தகவல் வந்தது. அடுத்த நாள் நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வாலிபரின் மரண வாக்குமூலத்தை பெற்றோம்.
21-ந் தேதி நாங்களும் வாக்குமூலம் பெற்றோம். 25-ந் தேதி இரவு தான் ஷாரோன்ராஜ் மரணமடைந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 26-ந் தேதி பிரேத பரிசோதனைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். 27-ந் தேதி 3 முறை அவரது உறவினர்களை அழைத்த பிறகு தான் அவர்கள் புகார் கொடுக்க முன் வந்தனர்.
22 வயது இளம்பெண் என்பதால் தான் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்காமல் நாங்கள் கிரீஷ்மாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினோம். 27, 28 ஆகிய தேதிகளில் இந்த வழக்கில் முக்கிய ஆவணங்களை நாங்கள் சேகரித்தோம். விசாரணை தீவிரமாக
நடந்து கொண்டிருந்த போது தான் வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. மரண வாக்கு மூலத்தில் ஷாரோன் ராஜ் யார் மீதும்
புகார் கூறவில்லை. அதே சமயத்தில் ஷாரோன்ராஜின் ரத்த மாதிரியை பரிசோதித்ததில் பூச்சி கொல்லி மருந்தின் தாக்கம் இருந்ததாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது விசாரணைக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
விசாரணை நடத்தப்படும்
இந்தநிலையில் விசாரணை அதிகாரிகளின் அனுமதி இன்றி இன்ஸ்பெக்டர் ஹேமந்த் வெளியிட்ட ஆடியோ பதிவு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு தெரிவித்துள்ளார்.