பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்காததால் வாக்குவாதம்: அரசு பஸ் டிரைவரை தாக்கிய அதிகாரி மீது வழக்கு
பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்காததால் வாக்குவாதம்: அரசு பஸ் டிரைவரை தாக்கிய அதிகாரி மீது வழக்கு;
ஊட்டி
நீலகிரி மாவட்டம் காட்டேரி அடுத்த சேலாஸ் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 47). இவர் ஊட்டி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் வழக்கம்போல் ஊட்டி- அச்சனக்கல் வழித்தடத்தில் செல்லும் பஸ்சை இயக்கினார். அதில் கண்டக்டராக குமார் என்பவர் இருந்தார்.ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் சென்றதும் பஸ்சில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர் மீண்டும் பஸ்சை பணிமனைக்கு கொண்டு வந்து பழுது நீக்கி தருமாறு கூறினார். இதன் பின்னர் பழுது நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பஸ்சை மீண்டும் ஓட்டிச் சென்றார். அப்போது மீண்டும் பஸ் சரியாக பிரேக் பிடிக்காதது தெரிய வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஆனந்தன் மீண்டும் பஸ்சை பணிமனைக்கு ஓட்டி வந்தார்.அப்போது அங்கு உதவி என்ஜினியராக பணியாற்றும் மணிகண்டனுக்கும், ஆனந்தனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் உதவி என்ஜினீயர் மணிகண்டன் தன்னை தகாத வார்த்தையால் திட்டி வயிற்றில் எட்டி உதைத்ததாக கூறி ஆனந்தன் ஊட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி ஆபாசமாக பேசுதல், (294) (பி), தன்னிச்சையாக மற்றவரை காயப்படுத்துதல் (323) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.