ஜெயலலிதா குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

ஓர் அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம். ஒழுக்கம் உடையவர்கள் தவறியும்கூட தன் வாயால் தகாத சொற்களைப் பேச மாட்டார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2023-01-06 09:34 GMT

சென்னை,

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்பதற்கேற்ப, தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி, தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்து, மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்து, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு, தமிழ்நாட்டு மக்களுக்காக தவ வாழ்வு வாழ்ந்து, தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து, மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் இன்றளவிலும் குடிகொண்டிருப்பவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

இப்படிப்பட்ட ஆளுமைமிக்க தலைவரை, பார் போற்றும் தலைவரை, முதலமைச்சருக்கெல்லாம் முதலமைச்சராக விளங்கியவரை, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற அரும்பெரும் தலைவரை, அநாகரிகமற்ற, அருவருக்கத்தக்க, பண்பாடற்ற நாகூசும் வார்த்தைகளால் பேசியதோடு, மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களை அறிமுகம் செய்து வைத்ததில் தனக்கும் ஒரு பங்கு உண்டு என்று அண்மையில், சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

வருவாய்த் துறை அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே திரைத்துறையில் அறிமுகமாகி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர். 1965 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின்போது, தான் வைத்திருந்த தங்க நகைகளை அன்றைய பாரதப் பிரதமர் திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்களிடம் வழங்கிய பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆளுமைத் திறனை நன்கு உணர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், மாண்புமிகு அம்மா அவர்களை அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சத்துணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கும் பொறுப்பு மாண்புமிகு அம்மா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பதவிகளையும் மாண்புமிகு அம்மாவிற்கு வழங்கினார் புரட்சித் தலைவர் அவர்கள்.

புரட்சித் தலைவர் அவர்களின் மறைவிற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்து, கட்டுக்கோப்புடன் வைத்திருந்து, நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இது மட்டுமல்லாமல்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிய பெருமை மாண்புமிகு அம்மா அவர்களுக்கு உண்டு. தமிழக அரசியல் வரலாற்றில், 32 ஆண்டுகளுக்கு பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.

இது மட்டுமல்லாமல், முதல் முறையாக 234 தொகுதிகளிலும் 'இரட்டை இலை' சின்னத்தில் வேட்பாளர்களை போட்டியிட வைத்து, மக்களின் அன்பான, மகத்தான ஆதரவோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை நிலைநாட்டிய பெருமையும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலில் அறிமுகப்பபடுத்தப்பட்டு, தமிழக மக்களின் அன்பைப் பெற்ற புரட்சித் தலைவி அம்மாவை அறிமுகப்படுத்தியதில் தனக்கும் பங்கு உண்டு என்று வருவாய்த் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது கேலிக்கூத்தாகவும், நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

பதவிக்காக கட்சி மாறி, அமைச்சராகியுள்ள திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தான் சார்ந்துள்ள கட்சியின் தலைமையை குளிர்விக்க வேண்டுமென்று நினைத்தால், அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரை துதிபாடலாம். அதில் எங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை. அதே சமயத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளரான மாண்புமிகு அம்மா அவர்களை சிறுமைப்படுத்தி பேசுவது என்பது ஒழுக்கமற்ற, பொறுப்பற்ற செயல். கண்டிக்கத்தக்கது.

ஓர் அமைச்சராகப் பதவி வகிப்பவருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம். ஒழுக்கம் உடையவர்கள் தவறியும்கூட தன் வாயால் தகாத சொற்களைப் பேச மாட்டார்கள். ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக ஒழுக்கமற்ற முறையில்

நாகூசும் வார்த்தைகளை திரு. இராமச்சந்திரன் அவர்கள் பேசியிருப்பது வெட்கக்கேடான செயல். தன்னுடைய தரம் தாழ்ந்த பேச்சின்மூலம் அமைச்சர் பதவிக்கே இழுக்கை தேடிக் கொடுத்து இருக்கிறார் திரு. இராமச்சந்திரன் அவர்கள்.

இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் செம்மை புரிவது ஒழுக்கம் என்பதை மனதில் கொண்டு நாகரிகமற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதையும், உண்மைக்குப் புறம்பான தகவல்களை தெரிவிப்பதையும் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இனி வருங்காலங்களில்,

"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு"

என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் நடந்து கொள்வதுதான் அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு அழகாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.    



Tags:    

மேலும் செய்திகள்