ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

கோவை மாநகராட்சியில் வேலை செய்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-21 19:15 GMT

கோவை

கோவை மாநகராட்சியில் வேலை செய்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்

கோவை மாநகராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.507 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், கலெக்டர் அறிவித்த தினக்கூலி ரூ.721-ஐ வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

2-வது நாளாக போராட்டம்

அவர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி தூய்மை பணியாளர்கள் காலையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டத்தின் நோக்கம், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து தொழிற்சங்க தலைவர்கள் பேசினார்கள். இதையடுத்து தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்க தலைவர்கள் கூறியதாவது:-

உடன்பாடு இல்லை

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.721 வழங்கலாம் என்று கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்து இருக்கிறார். ஆனால் அந்த கூலி எங்களுக்கு வழங்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக ரூ.507 தான் வழங்கப்படுகிறது. அதிலும் பிடித்ததுபோக ரூ.470 தான் கைக்கு கிடைக்கிறது.

நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருகிறோம். எங்களை இதுவரை நிரந்தரம் செய்யவில்லை. இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவேதான் நாங்கள் தற்போது காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

போராட்டம் தொடரும்

எனவே எங்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த செல்வம், அகில இந்திய தொழிற் சங்க மைய கவுன்சில் கோவை மாவட்ட தலைவர் சந்தானகுமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்