பூங்காக்களை பராமரிக்காத நிறுவனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் - மாநகராட்சி எச்சரிக்கை
பூங்காக்களை பராமரிக்காத நிறுவனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.;
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில், பூங்காத்துறை சார்பில் பொதுமக்களின் பொழுது போக்கிற்காகவும், சுற்றுச்சுழலை பேணிகாக்கவும் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 571 பூங்காக்களின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூங்காத்துறை சார்பில் கடந்த மே மாதம் 29-ந்தேதி முதல் ஜூன் மாதம் 10-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் பராமரிப்பில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு இருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.