தொடர் மழை எதிரொலி: 137 அடியாக உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 137 அடியாக உயர்ந்தது;
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 137.05 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 136.85 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 816 கன அடியாக காணப்பட்டது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.05 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1109 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மழை பெய்த அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
பெரியாறு 15.2, தேக்கடி 1, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 2, சண்முகா நதி 7.2, வீரபாண்டி 17.2, வைகை 54, மஞ்சளாறு 6, சோத்துப்பாறை 64, ஆண்டிப்பட்டி 8.8, அரண்மனைப்புதூர் 59, போடி 28.6, பெரியகுளம் 35.