தேனி மாவட்டத்தில் தொடரும் அலட்சியம்: இடிந்து விழும் அபாயத்தில் அரசு பள்ளி கட்டிடங்கள்: அச்சத்தோடு படிக்க வரும் மாணவ, மாணவிகள்
இடிந்து விழும் அபாயத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.;
சேதமடைந்த 96 கட்டிடங்கள்
நெல்லையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளி கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பழமையான மற்றும் சேதம் அடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யவும், பழமையான கட்டிடங்களை இடித்து அகற்றவும் அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் 96 பள்ளிகளில் பழமையான மற்றும் சேதம் அடைந்த கட்டிடங்கள் இருப்பது தெரியவந்தது. இந்த பள்ளிகளை இடித்து அகற்ற கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டத்தில் பழமையான கட்டிடங்கள் தொடர்பான விவரங்களை பொதுப்பணித்துறையினருக்கு, கல்வித்துறை அதிகாரிகள் வழங்கினர். பொதுப்பணித்துறை மூலமாக பழமையான கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆபத்தான கட்டிடம்
ஆனால், மாவட்டத்தில் இந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் இன்னும் பல இடங்களில் அகற்றப்படாமல் கிடக்கின்றன. இதேபோல் சேதம் அடைந்த பழமையான கட்டிடங்கள் பல இடிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழைக் காலம் என்பதால் இத்தகைய பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் அச்சத்தோடு வந்து செல்லும் நிலைமை உள்ளது.
குறிப்பாக கம்பத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த கட்டிடத்தில் இருந்த ஜன்னல், கதவுகள் அகற்றப்பட்டன. ஆனால், இடிக்கும் பணி தொடங்கப்படாமல் ஆபத்தான நிலையில் அப்படியே காட்சி அளிக்கிறது. இந்த கட்டிடத்துக்குள் மாணவர்கள் சென்று விளையாடுவதும், அவர்களை ஆசிரியர்கள் எச்சரித்து வெளியேற்றும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
தேனி பங்களாமேட்டில் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி பழமையான கட்டிடத்தில் செயல்படுகிறது. இந்த கட்டிடம் ஓடுகளால் அமைக்கப்பட்ட மேற்கூரையுடன் உள்ளது. ஓடுகள் சேதம் அடைந்து மழைக்காலத்தில் ஒழுகும் நிலைமை உள்ளது. இதன் காரணமாகவும் இங்கு மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதியை சேர்ந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.
வகுப்பறை பற்றாக்குறை
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியானது, அரசால் மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கட்டிட வசதிகள் இருந்தாலும் கல்வித்துறை சார்ந்த பிற அலுவலகங்களுக்கு பெரும்பாலான கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், ஒருங்கிணைந்த கல்வித்துறை வட்டார மேற்பார்வையாளர் அலுவலகம், அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட உடற்கல்வி அலுவலகம், மாலை நேரக் கல்லூரி ஆகியவையும் இங்கு செயல்படுகின்றன.
இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வகுப்பறை பற்றாக்குறை உள்ளது. ஒரே வகுப்பறையில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலைமைக்கும், வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து படிக்கும் நிலைமைக்கும் தள்ளப்படுகின்றனர். மேலும் இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் இருந்தும் முழுமையான பயன்பாடு இன்றி உள்ளது.
பெரியகுளம், தேவதானப்பட்டி, போடி, கம்பம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளிலும் போதிய கட்டிட வசதியின்றி பல பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பழமையான கட்டிடங்கள் என்று இடிக்கப்பட்ட பல பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணியை தொடங்காததாலும் வகுப்பறை பற்றாக்குறை நிலவுகிறது.
எனவே, மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உள்ள பழமையான கட்டிடங்களை முழுமையாக அகற்றவும், தேவையான இடங்களில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் கட்டிடங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. அவ்வாறு கட்டிட வசதி மற்றும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தால் வரும் கல்வி ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அப்புறப்படுத்த வேண்டும்
இதுதொடர்பாக அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் வீரமணி கூறுகையில், "அல்லிநகரம் அரசு பள்ளியில் விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும். அங்கு அமைந்துள்ள கல்வித்துறை மற்றும் அது சார்ந்த பிற அலுவலகங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள் வைப்பதற்கும் பள்ளி வகுப்பறை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
எனவே, தேனியில் குடோன் வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைத்து விட்டு, இந்த பள்ளியில் உள்ள அலுவலகங்களை அங்கு மாற்ற வேண்டும். அதுபோல், தேனி நகரில் அரசு பெண்கள் பள்ளி அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. இதற்காக 9 ஆண்டுகளுக்கு முன்பே அல்லிநகரம் கிராம கமிட்டி சார்பில், பெண்கள் பள்ளி அமைப்பதற்கான கட்டணம் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்பை அரசு வெளியிடவில்லை" என்றார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சிவக்குமார் கூறுகையில், "நான் பணியாற்றும் பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழமையான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை அப்புறப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் சிலர் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால், தற்போது வரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்தை பூட்டி வைத்துள்ளோம். மாவட்டம் முழுவதும் பழமையான கட்டிடங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
சிறப்பு நிதி தேவை
உத்தமபாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகதீசன் கூறுகையில், "உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பறைகள் போதிய இடவசதியின்றி சிறியதாக உள்ளன. மாணவர்களுக்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. பாய் கூட விரிக்காமல் தரையில் அமர்ந்து படிக்கின்றனர். உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதி இல்லை. மாவட்டத்தில் பல இடங்களில் இன்னும் பழமையான கட்டிடங்கள் அகற்றப்படாமல் உள்ளன. பல அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விளையாட்டு மைதான வசதி இல்லை. கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிப்பிடத்தை ஆண்டு தோறும் பராமரிக்க பள்ளிகளுக்கு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்றார்.
கம்பத்தை சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளர் பாண்டி கூறுகையில், "கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பழமையான கட்டிடத்தை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை பாதியில் முடங்கிக் கிடக்கிறது. தற்போது ஜன்னல்கள், கதவுகள் அகற்றப்பட்டு ஆபத்தான நிலையில் கட்டிடம் உள்ளது. இதனால் கட்டிடத்துக்குள் எளிதில் சென்று விளையாடும் சூழல் உள்ளது. இதனால், மழைக் காலங்களில் இடிந்து விழுந்து பெரிய அளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்டம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள் அனைத்தையும் துரிதமாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த பணிகளை சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.