தொடர் விடுமுறை: பழனியில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்களில் பழனிக்கு படையெடுத்துள்ளனர்.
பழனி,
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு வாரவிடுமுறை, தொடர்விடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்தவகையில் சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் என தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
தொடர் விடுமுறை எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்களில் பழனிக்கு படையெடுத்துள்ளனர். இதனால் அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பொது கட்டணம் மற்றும் தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் அடிவாரத்தில் இருந்து பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு செல்கின்றனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் மலைக்கோவில் வழியாக சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் கீழே இறங்கி வருவதற்கு படிப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.