கொத்தனாருடன் மனைவிக்கு கள்ளக்காதல்... கண்டித்த கணவர்... அடுத்து நடந்த கோரம்
ஆமோஸ்- நந்தினி இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.;
தென்காசி,
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரகேரளம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆமோஸ் (வயது 26). இவரும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த நந்தினி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஹன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
ஆமோஸ் தனது குடும்பத்துடன் தற்போது கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் வசித்து வந்தார். அங்கிருந்து தினமும் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று பகலில் ஆமோசை வீட்டில் வைத்து மர்மநபர் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
உடலில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆமோஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அலறினார்கள். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். உடனடியாக கடையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆமோஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கட்டிட தொழிலுக்கு சென்றபோது ஆமோசுக்கும், சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்ததாகவும், இதனால் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இருந்த போதிலும் ஆமோசின் மனைவி நந்தினியிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நந்தினிக்கும், முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி டேனிஸ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதாவது, கொத்தனாரான அந்தோணி டேனிசிடம், ஆமோஸ் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
ஆமோசிடம் செல்போன் கிடையாது. அவரது மனைவியிடம் மட்டும் செல்போன் இருந்தது. அப்போது, ஆமோசை வேலைக்கு அழைப்பது தொடர்பாக அந்தோணி டேனிஸ் செல்போனில் தொடர்பு கொண்டு நந்தினியிடம் அடிக்கடி பேசி வந்தார். இதனால் அவர்களுக்குள் இந்த பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஆமோஸ் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் அவர் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
நேற்று பகலில் ஆமோஸ் வெளியே சென்ற நேரத்தில் அவரது வீட்டிற்கு அந்தோணி டேனிஸ் சென்றார். அந்த சமயத்தில் வீட்டிற்கு வந்த ஆமோஸ், அந்தோணி டேனிஸ் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணி டேனிஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆமோசை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக அவரது மனைவி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற அந்தோணி டேனிசை பிடித்தனர். அவர் மற்றும் நந்தினியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.