ஏமாற்றும் விதத்தில் விளம்பரப்படுத்தி உப்பு விற்பனை: தனியார் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
ஏமாற்றும் விதத்தில் விளம்பரப்படுத்தி உப்பு விற்பனை செய்த தனியார் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.;
ஏமாற்றும் விதத்தில் விளம்பரப்படுத்தி உப்பு விற்பனை செய்த தனியார் நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
விளம்பரம்
திருவாரூர் கிடாரங்கொண்டான் ஆலடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் இந்து உப்பு உயர் ரத்த அழுத்தத்தை சீராக்கும், சர்க்கரை அளவை குறைக்கும், இதயத்தை உறுதியாக்கும், தைராய்டு நோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்தும் சாதாரண உப்பை விட மருத்துவ குணம் நிறைந்தது என ஒரு தனியார் நிறுவனம் துண்டு பிரசுரம் மூலம் விளம்பரம் செய்திருந்ததை நம்பி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவாரூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 500 கிராம் உப்பு வாங்கி 6 மாதமாக பயன்படுத்தினார்.
ஆனால் உப்பு மூலமாக உடலில் எவ்வித பலனும் இல்லை என்பதை உணர்ந்த அவர், பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தோடு நேர்மையற்ற வணிக நடைமுறையை பயன்படுத்தி உப்பு விற்பனை செய்யப்பட்டது குறித்து கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.2 லட்சம் இழப்பீடு
இந்த வழக்கில் திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. அப்போது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் தவறாக வழி நடத்தும் விளம்பரம் குறித்து விசாரணை நடத்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்துக்கு மட்டுமே வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் தவறாக வழி நடத்தும் விளம்பரம் மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறை செய்துள்ளதற்காக இழப்பீடு தொகையாக ரூ.2 லட்சத்தை தமிழ்நாடு மாநில நுகர்வோர் நலநிதி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், புகார்தாரருக்கு மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தியதற்காக ரூ.25 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கின் செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் அடங்கிய அமர்வு தனியார் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.