ராகுல்காந்தி நடைபயண முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கும் ராகுல்காந்தி நடைபயண முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் நடந்தது.

Update: 2022-09-04 19:18 GMT

நாகர்கோவில்:

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கும் ராகுல்காந்தி நடைபயண முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் நடந்தது.

ஆலோசனைக்கூட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தை வருகிற 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி அங்கு பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர் அவர் நடைபயணத்தை தொடங்கி, குமரி மாவட்டத்தில் 7, 8, 9, 10 ஆகிய 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம், பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

உற்சாக வரவேற்பு

கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பார்வையாளருமான தினேஷ்குண்டுராவ், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜெயக்குமார், ஜோதிமணி, செல்லக்குமார், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் மத்திய மந்திரி இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் ராபர்ட் புரூஸ், பொன். கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர் தாரகைகத்பட், நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவின்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், மாவட்ட முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், விவசாய பிரிவு மாநில தலைவர் பவன்குமார், சேவாதள தலைவர் குங்பூ விஜயன், மகிளா காங்கிரஸ் தலைவி சுதாராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை அவர் மேற்கொள்ளும் நடைபயண நிகழ்ச்சிகளின்போது சாலையின் இருபுறமும் கட்சியினர் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இதற்காக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அழகிரி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

ராகுல் காந்தி வரவேற்பு ஏற்பாடுகளை கண்காணிக்க 18 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி

முன்னதாக ராகுல்காந்தி 2-வது நாள் நடைபயணத்தின்போது இரவு தங்க உள்ள நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகளை கே.எஸ்.அழகிரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்