விழுப்புரத்தில் காதல் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கட்டிட தொழிலாளி கைது
விழுப்புரத்தில் காதல் மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்ற கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் கே.கே.சாலை மணி நகரை சேர்ந்தவர் திவ்யா (வயது 27). இவரும் விழுப்புரம் சாலாமேடு ஜீவராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான வடிவேல் (35) என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை திவ்யா, தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திவ்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக வடிவேல், கத்தியால் தனது மனைவி திவ்யாவின் கழுத்தை அறுத்துக்கொலை செய்ததும், இதற்கு வடிவேலுவின் உறவினர் நாகராஜ் என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து, வடிவேல், நாகராஜ் ஆகிய இருவரின் மீதும் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததோடு இருவரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு விழுப்புரம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற வடிவேலுவை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட நாகராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கணவரே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவத்தால் அந்த குடும்பமே நிர்கதியாகியுள்ளது. அவர்களது 3 குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
..............