அவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி மும்முரம்

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-02-26 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அரசு ஆஸ்பத்திரி

கோத்தகிரி பஸ் நிலையத்திற்கு அருகே அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த ஆஸ்பத்திரியானது ஆண் மற்றும் பெண் நோயாளிகளுக்கான உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, காசநோய் பிரிவு, ரத்த வங்கி, சலுகை கட்டணத்தில் சி.டி. ஸ்கேன் எடுக்கும் பிரிவு, ஆக்சிஜன் பிளாண்ட், சித்த மருத்துவ பிரிவு உள்பட பல்வேறு வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அவசர சிகிச்சை பிரிவு

குறிப்பாக வெளிநோயாளிகள் பிரிவில் தினமும் சுமார் 250 நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் பணியமர்த்தப்பட்டு, கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியிலேயே அது தொடர்பான கடினமான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இது வரை இல்லாமல் இருந்தது. இதனால் விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டும் செய்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அல்லது கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டு அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது.

தூண்கள் அமைக்கப்படுகிறது

இந்தநிலையில் கோத்தகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க தமிழக பொதுப்பணித்துறை ரூ.3 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து ஆஸ்பத்திரி நுழைவு வாயில் அருகே இருந்த பழைய கட்டிடங்களை இடித்து, நிலத்தை சமப்படுத்தும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வந்தன. தற்பாது அஸ்திவாரம் கட்டி முடிக்கப்பட்டு, தற்போது கட்டிடம் கட்டுவதற்காக தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் விரைவில் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்