ஈரோடு கே.கே.நகரில் ரெயில்வே பாலம் கட்டும் பணிமுட்புதராக காணப்படும் தற்காலிக பாதை சீரமைக்கப்படுமா?;வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு கே.கே.நகரில் ரெயில்வே துறை சார்பில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதன் காரணமாக முட்புதர்கள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தற்காலிக பாதையை சீரமைக்கவேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-04-10 23:50 GMT

ஈரோடு கே.கே.நகரில் ரெயில்வே துறை சார்பில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதன் காரணமாக முட்புதர்கள் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தற்காலிக பாதையை சீரமைக்கவேண்டும் என்று எதிர்பார்த்துள்ளனர்.

மாற்றுப்பாதை

ஈரோடு சென்னிமலை ரோடு கே.கே.நகர் பகுதியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இங்கு ரெயில் பாலம் மற்றும் சாலையில் பழுது ஏற்பட்டதால் பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. இந்த பணிகள் வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும் என்று ரெயில்வே நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே சென்னிமலை ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஈரோட்டில் இருந்து ரங்கம்பாளையம் செல்லும் பஸ் உள்பட அனைத்து வாகனங்களும் தமிழ்நாடு வீட்டு வசதிவாரியம் முத்தம்பாளையம் பகுதி 3 வழியாக செல்லும் வகையிலும், மோட்டார் சைக்கிள்கள் கே.கே.நகர் வழியாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 7 வழியாக செல்லும் வகையிலும் மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

புதராக கிடக்கும் தற்காலிக பாதை

இதில் கே.கே.நகர் வழியாக செல்லும் பாதை மிகவும் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது. சுமார் 500 மீட்டர் தூரம் அளவுக்கு ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டிய மண்ரோடு முட்புதராக உள்ளது. இந்த வழியாகத்தான் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 2 சக்கர வாகனங்கள் செல்கின்றன.

பெண்கள் 2 சக்கர வாகனங்களில் செல்லும்போது மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே முட்புதர்களை அகற்றித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. மேலும் முட்புதர்கள் நிறைந்து காணப்படும் தற்காலிக பாதையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

காயம்

முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த எஸ்.சாந்தி என்பவர் கூறியதாவது:-

கே.கே.நகர் நுழைவு பாலத்தில் இருந்து ரங்கம்பாளையம், ரெயில் நகர், ஜீவாநகர், முத்தம்பாளையம் பகுதி 1, நல்லியம்பாளையம், கொங்கு கல்வி நிலையம் பள்ளி, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கல்லூரி ஆகியவற்றுக்கு செல்ல கே.கே.நகர், முத்தம்பாளையம் பகுதி 7 வழியாக செல்வது எளிதாக உள்ளது. சிறிது தூரம்தான் இருக்கிறது. முத்தம்பாளையம் பகுதி 3 வழியாக செல்வது என்றால் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமாக சுற்றி செல்ல வேண்டும். ஆனால், குறுக்கு வழியாக மக்கள் எளிதில் செல்ல வசதியாக உள்ள கே.கே.நகர் பாதையில் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி புதர்கள் அதிக அளவில் உள்ளது. முட்செடிகள் உடலில் பட்டு காயமாகிறது. எனவே இங்குள்ள முள் செடிகளை வெட்டி அகற்றவும், பாதையை சமப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவ-மாணவிகள்

முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஆர்.சுவேதா கூறியதாவது:-

இந்த தற்காலிக பாதை வழியாக கல்லூரி மாணவ-மாணவிகள், பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அதிக அளவில் செல்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை சரியான நேரத்தில் கொண்டு விட வேண்டும் என்றால் இந்த பாதையைத்தான் பயன்படுத்த வேண்டியது உள்ளது. வேறு மாற்றுப்பாதைகள் வழியாக சென்றால் நேரமும், பெட்ரோலும் விரயமாகும். இதனால் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டி உள்ள மண்பாதையை அதிக அளவில் மக்கள் பயன்படுத்துகிறார்கள். பகல், இரவு என்று அனைத்து நேரத்திலும் வாகனங்கள் வந்து சென்று கொண்டு இருக்கின்றன. மாற்றுப்பாதை குறித்து சரியான அறிவிப்புகள் இல்லாததால் கார்கள், கனரக வாகனங்கள் முள் புதர் வரை வந்து சாலை குறுகலாக இருப்பதால், தொடர்ந்து செல்ல முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இங்குள்ள முள் புதர்களை அகற்றி, சாலையை சமப்படுத்தினால் கனரக வாகனங்கள் வரை எளிதில் செல்ல முடியும். பொதுமக்களும் சிரமம் இன்றி கடந்து செல்வார்கள். தற்காலிக பாதையாக இருந்தாலும் பொதுமக்கள் சிரமமின்றி வாகனங்கள் ஓட்டிச்செல்ல வசதியாக முள் புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்