ரூ.24 கோடியில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணி
மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.;
மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும்,சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையருமான அமுதவல்லி, மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மயிலாடுதுறை நகரில் அரசு பெரியார் தலைமை ஆஸ்பத்திரி சாலை பகுதியில் உள்ள குளத்தில் நகராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மை பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர், மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மை பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள தூய்மை பணியாளர்கள் விவரங்களை கேட்டறிந்தனர்.
தொடர்ந்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர், மாவட்ட கலெக்டர் தலைமையில் பொதுமக்கள், நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கொண்டல் அய்யாவையனார் இடது ஆற்றங்கரை சாலையை முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் தார்சாலையாக அமைக்கும் பணிகளை பார்வையிட்டனர்.
நுண்ணுயிர் கிடங்கு
பின்னர், மயிலாடுதுறை நகரம் ஆனந்ததாண்டவபுரம் சாலை பகுதியில் இயங்கி வரும் திடக்கழிவு மேலா ண்மை திட்ட நுண்ணுயிர் உரக்கிடங்கினை நேரில் பார்வையிட்டு, நுண்ணுயிர் உரக்கிடங்கின் செயல்பாடு மற்றும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் பிரிக்கப்பட்டு தினசரி 3 டன் அளவிற்கு நுண்ணுயிர் உரம் தயார் செய்யும் தொழில்நுட்ப விவரங்களை நகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். அப்போது திடக்கழிவு மேலாண்மை திட்ட நுண்ணுயிர் உரக்கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
புதிய பஸ் நிலையம்
இதனைத் தொடர்ந்து மணக்குடியில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 361 சதுரமீட்டர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்ற விவரங்கள், முடிவுறுவதற்கான காலக்கெடு உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். அப்போது பணிகளை ஒப்பந்த காலகெடுவிற்குள் விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். இதைத்தொடரந்து மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட உதவி மையம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு, உதவி மையத்தில் பெறப்பட்ட விண்ணப்ப விவரங்கள் மற்றும் பெறப்பட்ட தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி கலெக்டர் யுரேகா, நகராட்சி ஆணையர் சங்கர், தாசில்தார் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.