நைனார் ஏரியில் மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம்
நைனார் ஏரியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது. மழைக்காலங்களில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மழை நீரானது இந்த ஏரியில் உள்ள தடுப்பு மதகு வழியாக சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இந்த ஏரியை தாண்டி மயானம் உள்ளது. மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை கழுத்தளவு நீரில் சுமந்து, அந்த மயானத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.இதனால் மயானத்திற்கு செல்ல வசதியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த கோரிக்கை குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து, போராட்டம் நடத்த உள்ளதாக 'தினத்தந்தி' நாளிதழுக்கு பேட்டி அளித்தனர்.இதையடுத்து தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.40.91 லட்சம் மதிப்பீட்டில் சுடுகாட்டிற்கு செல்வதற்கு புதிய மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து ஏரியில் மேம்பாலம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.