மாகரல்- வெங்கச்சேரி இடையே ரூ.23½ கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

மாகரல்- வெங்கச்சேரி இடையே ரூ.23½ கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2023-09-15 08:39 GMT

தரைப்பாலம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா மாகரல் - வெங்கச்சேரி இடையே உள்ள செய்யாற்றின் குறுக்கே உத்திரமேரூரையும் காஞ்சீபுரத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சென்று வருவதற்கு தரைப்பாலம் உள்ளது. செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது எல்லாம் மாகரல் வெங்கச்சேரி இடையிலான தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடையும் நிலையில் மாதக்கணக்கில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உத்திரமேரூருக்கும், காஞ்சீபுரத்திற்கும் செல்ல முடியாமல் அவதிப்படுவதோடு, செய்யாற்றை சுற்றி இருபுறமும் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 30 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றி செல்லும் வகையில் சிரமமும் ஏற்பட்டு வந்தது.

கடந்த 2 ஆண்டுக்கு முன்பு செய்யாற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலத்தின் நடுப்பகுதியில் சேதம் ஏற்பட்டு போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டது. அதனால் மாகரல்- வெங்கச்சேரி இடையிலான தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேதமடைந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ரூ.23½ கோடியில் மேம்பாலம்

கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ரூ.23½ கோடி மதிப்பீட்டில் மாகரல் - வெங்கச்சேரி இடையே புதிதாக உயர் மட்ட மேம்பாலம் கட்ட அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது.

உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகளை இன்னும் 2 மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டு பணிகளை விரைவு படுத்தி வருகின்றனர்.

இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிந்து மேம்பாலம் திறக்கப்பட்டால் செய்யாற்றில் மழைவெள்ளம் வந்தாலும் புதிய உயர்மட்ட மேம்பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து தங்கு தடையின்றி நடைபெறும் என்று வாகன ஓட்டிகளும், கிராம மக்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்