ஆற்றின் குறுக்கே ரூ.55 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி

கூடலூரில் இருந்து வேடன் வயலுக்கு செல்லும் சாலையில் ஆற்றின் குறுக்கே ரூ.55 லட்சத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.;

Update: 2023-06-01 00:15 GMT

கூடலூர்

கூடலூரில் இருந்து வேடன் வயலுக்கு செல்லும் சாலையில் ஆற்றின் குறுக்கே ரூ.55 லட்சத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

உடைந்த பாலம்

கூடலூர் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பெய்த தொடர் கனமழையின் போது, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 1-ம் மைல், ஏழுமுறம், வேடன் வயல், மங்குழி உள்பட பல இடங்களில் ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உடைந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில் உடைந்த பாலங்களை புதுப்பிப்பதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து சேதம் அடைந்த இடங்களில் புதிய பாலங்கள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூடலூரில் இருந்து வேடன் வயலுக்கு செல்லும் சாலையின் குறுக்கே ஆற்று வாய்க்காலில் பழைய பாலம் உடைந்தது. இதை புதுப்பிக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு

இதையொட்டி மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சத்தை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. தொடர்ந்து பாலம் உடைந்த இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் முறையாக தூர்வாரி அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கட்டுமான பணி பல வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இதனால் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, பாலம் உடைந்து பள்ளிக்கூட மாணவர்கள் முதல் பல்வேறு தரப்பினரும் ஆற்று வாய்க்காலை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பாலம் கட்டும் பணியும் தொடங்காமல் இருந்தது. தற்போது நிதி ஒதுக்கி கட்டுமான பணி நடைபெறுவதால் தீர்வு கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்