ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. மயிலாப்பூரில் விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்படுகிறது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

Update: 2022-11-08 23:54 GMT

சென்னை,

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.15 கோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.

ஆதார் இணைப்பு திட்டத்தை நிறைவு செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகிய பணிகளை மேற்கொள்ள இம்மாதம் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளார்.

விழிப்புணர்வு பேரணி

துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி, கடந்த 7-ந் தேதியோடு நிறைவடைந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் வெளியிடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம், முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு (எஸ்.வி.இ.இ.பி.) என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.

அந்தவகையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள செவித்திறன் குறைபாடுள்ள சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் பேரணியை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அரசு முதன்மைச் செயலர் சத்யபிரதா சாகு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மயிலாப்பூரில் முக்கிய வீதிகள் வழியாக செல்லும் இந்த பேரணியில் பொதுமக்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

இறுதி வாக்காளர் பட்டியல்

2023-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான சிறப்பு முகாம்கள் வருகிற 12, 13 மற்றும் 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் நடத்தப்படுகிறது.

சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை டிசம்பர் 26-ந் தேதி நிறைவடைகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படுகிறது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்