போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரசார்

விஜய் வசந்த் எம்.பி. குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-23 18:45 GMT

நாகர்கோவில்:

விஜய் வசந்த் எம்.பி. குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய்வசந்த் எம்.பி. குறித்து அவதூறு

கன்னியாகுமரி தொகுதி விஜய்வசந்த் எம்.பி. குறித்து மாற்றுக் கட்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டார். அந்த வாலிபரை கைது செய்யக்கோரி குமரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கடந்த 21-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனிடையே காங்கிரஸ் நிர்வாகியிடம் போலீசார் உடனடியாக அந்த வாலிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அவதூறு பரப்பிய வாலிபரை கைது செய்யக்கோரி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால்சிங், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்டனர்.

முற்றுகை போராட்டம்

பின்னர் கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செல்வன், ராஜன், ஐ.ஜி.பி.லாரன்ஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

உடனே நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சம்பந்தப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்