பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் காமராஜர் கல்வெட்டு வைக்க வேண்டும்-மேயரிடம், காங்கிரஸ் கட்சியினர் மனு

பாளையங்கோட்டை பஸ்நிலையத்தில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் மேயரிடம் மனு கொடுத்தனர்

Update: 2022-12-20 21:17 GMT

பாளையங்கோட்டை பஸ்நிலையத்தில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டை மீண்டும் வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் மேயரிடம் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, செயற் பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி செயற்பொறியாளர்கள் லெனின், பைஜூ, ராமசாமி, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், ஜஹாங்கீர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில்,

"பாளையங்கோட்டை பஸ்நிலையம் காமராஜர் முதல்-அமைச்சராக இருக்கும்போது திறந்து வைக்கப்பட்டது. இதற்கான கல்வெட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பஸ்நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருந்த காமராஜர் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை அங்கிருந்து எடுத்து விட்டார்கள். மீண்டும் அந்த கல்வெட்டை அங்கே வைக்க வேண்டும். இல்லையெனில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கூறியுள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட மேயர், இதுகுறித்து அதிகாரியிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம்

தமிழ் புலிகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர்.

அதில், 36-வது வார்டு பாளையங்கோட்டை காமராஜர் காலனியில் உள்ள ரேஷன் கடை மேற்கூரை உடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. எனவே ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், என்று கூறியுள்ளனர்.

12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில், "நெல்லை உடையார்பட்டி ரெங்கநாதன் தொடக்கப்பள்ளியின் மேற்கூரை உடைந்த நிலையில் உள்ளது. இதை உடனடியாக சரிசெய்து தர வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பல்வேறு அமைப்பினர் மனு கொடுத்தனர்.

ஆய்வு

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் நேற்று புதிய பஸ்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் பெண்கள், முதியவர்கள் பிளாட்பாரங்களில் படுத்திருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்காக புதிய பஸ்நிலையத்தில் முதல் தளத்தில் ஓய்வு அறைகள் விரைவில் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளோம். ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காண்பித்த பின்னர் இதில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜஹாங்கீர் பாட்சா, கவுன்சிலர் நித்தியபாலையா ஆகியோர் உடன் சென்றனர்.

----------------------

மாடுகளின் ஏலம், அபராதம் மூலம்

மாநகராட்சிக்கு ரூ.10 லட்சம் வருவாய்

மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், `நெல்லை மாநகரில் 4 மண்டலங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்த 160 மாடுகள் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 97 மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. மற்ற மாடுகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இதுவரை மாடுகள் ஏலம் மற்றும் அபராதம் மூலம் மாநகராட்சிக்கு ரூ.10 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்