ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.
நாகர்கோவில்:
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.
பேரணி
பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.
இதை கண்டித்து காங்கிரசார் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள எம்.பி. அலுவலகம் முன்பு இருந்து காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கையில் தீப்பந்தம்
இந்த பேரணி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மணிமேடை வழியாக வேப்பமூட்டில் உள்ள காமராஜா் சிலை முன்பு முடிவடைந்தது. இதில் குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் சகாய பிரவீன், ஐரின் சேகர், ஈனோக், பாலையா, பிரவீன், ஜான் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் தீப்பந்தங்களை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பேரணியால் சில இடங்களில் லேசான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
முன்னதாக எம்.பி. அலுவலகத்தில் மாநகர நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மாநகரில் பல இடங்களில் போராட்டம் நடத்தவும், அதற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.