இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் மீது வழக்கு
மீன்சுருட்டி அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவருக்கும், சொக்கலிங்கபுரம் மெயின் ரோடு தெருவை சேர்ந்த மணிபாரதி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் குறுக்கு சாலையில் உள்ள விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, மணிபாரதி மற்றும் சிலர் சேர்ந்து கார்த்திகேயனை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் மணிபாரதி மீது மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சத்தியராஜ் மனைவி உஷா (40) கார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் சத்தியராஜை தாக்கி, குறுக்கு சாலையில் உள்ள அவரது பூக்கடையையும் சேதப்படுத்தியதாக புகார் அளித்தார். அதன்பேரில் மீன்சுருட்டி போலீசார் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.