இருதரப்பினரிடையே மோதல்; 34 பேர் கைது

இருதரப்பினரிடையே மோதல் தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-20 19:55 GMT

தாக்குதல்

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த காமராஜின் மகன் சிவா(வயது 22), சின்னசாமி மகன் சுரேஷ் (27) ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் மது போதையில், அதே கிராமத்தை சேர்ந்த நல்லுசாமி வீட்டின் முன்பு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவர்களை நல்லுசாமி சத்தம் போட்டு அனுப்பினார். இதனால் சிவா அவரது தெருவிற்கு சென்று தனது நண்பர்களான பொந்திஸ் என்ற பொன் அருண்(21), கோகுல் ஆகியோரை அழைத்துக் கொண்டு நல்லுசாமி வீட்டிற்கு வந்து, அவரது குடும்பத்தினரை தாக்கியுள்ளார்.

இதனால் நல்லுசாமி வீட்டின் அருகில் உள்ள ஒரு சமூகத்தை சேர்ந்த சுமார் 100 பேர் சிவாவின் தெருவிற்கு சென்று எப்படி எங்கள் ஆட்களை அடிக்கலாம் என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியபடி சிவா மற்றும் அவரது நண்பர்களை தேடி சென்றனர். அப்போது அவர்கள் அங்கிருந்த நிவாஸ் (19), சந்திரன் (27) ஆகியோரை தாக்கியுள்ளனர். அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

34 பேர் கைது

மேலும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 34 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும், போலீசார் குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

சாலை மறியல்

மேலும் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக லாடபுரத்தை சேர்ந்த ஒரு சமூகத்தினர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சரக்கு வாகனங்களில் வந்தனர். செஞ்சேரி அருகே வந்தபோது அவர்களை போலீசார் கைது செய்து பாலக்கரையில் திருமண மண்டபத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்