'ஓசி' என்றால் போயிட்டு, போயிட்டு வருவியா? என மூதாட்டியை தரக்குறைவாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் பணியிடை நீக்கம்
‘ஓசி’ என்றால் போயிட்டு, போயிட்டு வருவியா? என மூதாட்டியை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் அரசு பஸ் கண்டக்டரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.;
'ஓசி' என்றால் போயிட்டு, போயிட்டு வருவியா? என மூதாட்டியை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் அரசு பஸ் கண்டக்டரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மகளிருக்கு டவுன் பஸ்களில் இலவசம்
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிரும் நகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்பட அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகர பஸ்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து கையெழுத்திட்டார்.
இந்த திட்டம் மகளிர் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இலவச பஸ்சை மகளிர் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் பஸ்சின் முன்புறமும், பின்புறமும் 'பிங்க்' கலர் அடிக்கப்பட்டுள்ளது. சில பஸ் கண்டக்டர்கள் இலவசமாக தானே செல்கிறீர்கள் என ஓசியில் ஏறுவதாக மகளிரை தரக்குறைவாக பேசும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
மூதாட்டியிடம் தரக்குறைவாக பேசிய கண்டக்டர்
இதேபோல் 'ஓசி' என்றால் பஸ்சில் போயிட்டு, போயிட்டு வருவியா? என மூதாட்டியை அரசு பஸ் கண்டக்டர் தரக்குறைவாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பதிவான சம்பவம் நேற்று முன்தினம் தஞ்சை பழைய பஸ் நிலையம்-திருக்கருக்காவூர் வழித்தடத்தில் சென்ற டவுன் பஸ்சில் நடந்துள்ளது.
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பள்ளியக்கிரஹாரம், திட்டை, மெலட்டூர் வழியாக திருக்கருக்காவூருக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ் (34ஏ) நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருக்கருக்காவூருக்கு புறப்பட்டது. அப்போது 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் இந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்.
இவருக்கு இலவச பயணத்திற்கான டிக்கெட்டை கண்டக்டர் வழங்கினார். பஸ் மெலட்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது வேக,வேகமாக அந்த மூதாட்டி பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் பஸ் புறப்பட்டபோது இது என் ஊர் இல்லை என கூறி அந்த பஸ்சை நிறுத்தி அதில் அந்த மூதாட்டி ஏறி மீண்டும் பயணம் செய்தார்.
பஸ் திருக்கருக்காவூருக்கு சென்றவுடன் பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். அவர்களுடன் இந்த மூதாட்டியும் இறங்கினார். பின்னர் அந்த பஸ் மீண்டும் தஞ்சையை நோக்கி செல்வதற்காக புறப்பட்டது. அந்த நேரத்தில் அதே மூதாட்டி வேகமாக வந்து பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்தார்.
சமூகவலைதளங்களில் வைரல்
பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது கண்டக்டர் அந்த மூதாட்டியை 'ஓசி' என்றால் போயிட்டு, போயிட்டு வருவியா? என கேட்கிறார். ஆதற்கு அந்த மூதாட்டி, ஓசி என்று நான் போகவில்லை. ஏன் தம்பி இப்படி கோபமாக பேசுகிறாய்? மாலை போட்டுக்கிட்டு கோபமாக பேசுகிறாயே என பரிதாபமாக கேட்கிறார்.
இந்த காட்சியை அதே பஸ்சில் பயணம் செய்த ஒருவர் தனது செல்போன் வீடியோவில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பணியிடை நீக்கம்
இந்த காட்சிகள் வெளியானதையடுத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர்(பொறுப்பு) கணேசன், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனி அதிகாரி ஒருவரை நியமனம் செய்தார்.
அந்த அதிகாரி சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அரசு பஸ் கண்டக்டரான தஞ்சையை அடுத்த மானாங்கோரை ஊராட்சி வீரமாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(வயது 43) என்பவரை பணியிடை நீக்கம் செய்து கோட்ட பொதுமேலாளர் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் அவர், இதுபோன்று பயணிகளிடம் கண்ணியம் இல்லாமல் நடந்து கொள்ளும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு சுற்றறிக்கையையும் அனுப்பி உள்ளார்.