நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க கவுன்சிலருக்கு அனுமதி
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க கவுன்சிலருக்கு அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது;
நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த தேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், அம்பாசமுத்திரம் நகராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலராக உள்ளேன். எங்கள் பகுதி பொதுமக்களின் நலனுக்காக வார்டு மக்களின் குறைகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் தொடர்ந்து நகராட்சியிடம் முறையிட்டு வருகிறேன். ஆனால் மக்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தருவதில்லை. ஆனால் மக்களுக்கு பயனில்லாத திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். எனவே, வார்டுக்கு பயனுள்ள பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தேன். அவர்கள் அனுமதி தர மறுத்து விட்டனர். எனவே, இன்று (வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி போராட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரர் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.