காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்துகுறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-08-31 19:30 GMT

காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், உதவி கலெக்டர்கள் சங்கீதா, கீர்த்தனா, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சித்ரா, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குறுவை பயிர்கள் பாதிப்பு

கூட்டம் தொடங்கியபோது விவசாயிகள் சேதுராமன், தம்புசாமி, முருகையன் ஆகியோர் பேசுகையில், 'கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் நம்பிக்கையுடன் குறுவை சாகுபடியை தொடங்கினர். ஆனால் தொடர்ந்து போதிய தண்ணீர் வழங்கப்படாததால் குறுவை பயிர்கள் கருகி வருகிறது.

எனவே பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கே தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுத்து வருகிறது. எனவே சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ள முடியுமா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

வெளிநடப்பு

இந்த சூழ்நிலையில், தமிழகஅரசும், மாவட்ட நிர்வாகமும் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கான உறுதியினை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை.

எனவே கர்நாடக அரசை கண்டித்து அனைத்து குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்' என்றனர்.

இதையடுத்து விவசாயிகள் காவிரி நீர் வழங்காத கர்நாடக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

Tags:    

மேலும் செய்திகள்