இந்தி திணிப்பை கண்டித்து மாணவர், இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இந்தி திணிப்பை கண்டித்து மாணவர், இளைஞர் அமைப்பினர் தேனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
இந்தி திணிப்பு
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், தாய்மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் தேனி நகர் மதுரை சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கரண்குமார், மாணவர் சங்க மாவட்ட தலைவர் அருண் ஆகியோர் தலைமை தாங்கினர்.
வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்தும், தாய்மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம்
அதுபோல், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக தேனி பழைய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள், மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் சரவணபுதியவன், மாதர் சங்க மாவட்ட தலைவர் அழகேஸ்வரி, மாணவர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது இந்தி திணிப்பு நடவடிக்கை, மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.