சேலம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 3 ஆயிரத்து 643 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன.
மக்கள் நீதிமன்றம்
தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோர்ட்டில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து தீர்வு காணப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாதமும் அனைத்து கோர்ட்டுகளிலும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ் வரவேற்றார். மாவட்ட நீதிபதிகள் சுமதி, ஸ்ரீராமஜெயம், சேலம் வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜெகநாதன் கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர், பாகப்பிரிவினை வழக்குகளை விரைந்து முடிக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறு வக்கீல்களிடமும், பொதுமக்களிடமும் கேட்டுக்கொண்டார்.
3,643 வழக்குகளுக்கு தீர்வு
இதைத்தொடர்ந்து மோட்டார் வாகன விபத்து வழக்கில் சமரச தீர்வு ஏற்பட்டு பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.52 லட்சத்து 78 ஆயிரத்து 642 ஆயிரத்துக்கான இழப்பீடு தொகைக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜெகநாதன் வழங்கினார்.
சேலம், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் 23 அமர்வுகளில் சமரசம் செய்யக்கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, குற்ற வழக்குகள், சிவில் வழக்கு, குடும்ப வழக்கு என மொத்தம் 6,433 வழக்குகள் இந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. முடிவில், நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 643 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.33 கோடியே 55 லட்சத்து 77 ஆயிரத்து 902-க்கு தீர்வு தொகை வழங்கப்பட்டுள்ளது.