போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு

போரூர் ராமநாதீசுவரர் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய புகார்களை பரிசீலிக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.;

Update: 2022-06-04 06:35 GMT

சென்னை ஐகோர்ட்டில், சேலத்தை சேர்ந்த திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ஆர்.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துகள், நிலங்கள் பலரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 2014-ம் ஆண்டு முதல் இந்துசமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. சொத்துகளின் ஆவணங்கள் மாற்றப்பட்டுள்ளதால் கோவிலுக்கு பெருத்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கோவில் சொத்துகளை குத்தகைக்கு எடுத்தவர்களும் குத்தகை தொகையை அதிக அளவில் பாக்கி வைத்துள்ளனர். எனவே, கோவில் சொத்துகளை மீட்க போர்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, கோவில் சொத்துகளை மீட்க தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் ஆகியோர், மனுதாரர் ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ள மனுக்களை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்