கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது புகார் அளிக்கலாம்

கள்ளச்சாராயம் விற்பவர்கள் குறித்து வருவாய்த்துறையினரிடமோ, போலீசாரிடமோ புகார் அளிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசினார்.

Update: 2023-05-17 17:43 GMT

ேரஷன் கடை திறப்பு

திருப்பத்தூர் தாலுகா சுந்தரம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுந்தரம்பள்ளி முழு நேர ரேஷன் கடையை பிரித்து புதுப்பட்டி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் திறந்து வைத்தார். பின்னர் ரேஷன்பொருட்களை கலெக்டர் மற்றும் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ வழங்கினார்.

விழாவில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது;-

திருப்பத்தூர் மாவட்டத்தில் பகுதி நேர நியாய விலை கடைகள் நிறைய திறக்கப்பட்டு வருகிறது. இன்னும் நிறைய கடைகள் திறக்கப்பட உள்ளது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே 143 வழக்குகள் கிட்டத்தட்ட 25 நாட்களுக்குள் போடப்பட்டுள்ளது.

புகார் செய்யலாம்

அனைத்து டாஸ்மாக் கடையிலும் ஆய்வு செய்து 40 கடைகளில் 38 கடைகளில் விற்பனை குறைவாக உள்ளது என்று அறியப்பட்டது. இதன் மூலம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று அறியப்பட்டது. கள்ளச்சாராயத்தில் மெத்தனால் இருக்கும். டாஸ்மாக் விற்பனை செய்வதில் எத்தனால் இருக்கும், மெத்தனால் மூலம் கண் பார்வை பாதிக்கப்படும் மற்றும் உயிர் போக நேரிடும். அதனால்தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு 3,414 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 3,597 லிட்டர் கர்நாடகா மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. 30 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் இந்த செயல்களை யாரேனும் செய்தார்கள் என்றால் வருவாய்த்துறையினரிடமோ அல்லது காவல்துறையிடமோ தகவலை தெரிவிக்கலாம். மேலும் என்னுடைய தொலைபேசிக்கும் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், ஆத்மா தலைவர் ஆர்.முருகேசன், ஒன்றிய குழு துணைத்தலைவர் ஜி.மோகன்குமார், ஒன்றிய கவுன்சில் சாந்தா சண்முகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், நேரு, வட்ட வழங்கல் அலுவலர் திருமலை, கூட்டுறவு சார் பதிவாளர் தர்மேந்திரன், கூட்டுறவு சங்க செயலாளர் சேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் சார் பதிவாளர் சதாசிவம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்