முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக புகார்... ஆர்.நட்ராஜ் தொடர்ந்த வழக்கிலிருந்து நீதிபதி விலகல்
இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் டிஜிபியுமான ஆர்.நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு இடங்களில் இருந்த கோவில்களை இடித்தது தொடர்பாக தமிழக அரசு மற்றும் முதல்-அமைச்சரை விமர்சித்து ஆர்.நட்ராஜ் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி மாவட்ட எஸ்பியிடம் அளித்த புகாரின்பேரில், நட்ராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நட்ராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான ஆர்.நட்ராஜ் தனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்பதாலும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனக்கூறி இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.
மேலும் இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.