போலி ஆவணங்கள் மூலம் ரூ.25 கோடி நிலம் மோசடி புகார்

போலி ஆவணங்கள் மூலம் ரூ.25 கோடி நிலம் மோசடி புகார்

Update: 2022-06-20 16:40 GMT

திருப்பூர்

திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலமாக ரூ.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ரூ.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பு

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், அனுப்பர்பாளையத்தில் 7 பேருக்கு சொந்தமான 77 சென்ட் அளவுள்ள நிலத்தை தனியார் தனது மனைவி, மகள் பெயரில் போலி ஆவணங்கள் மூலமாக கிரையம் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.25 கோடியாகும். இதுகுறித்து வேலம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே போலி ஆவணம் மூலம் மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளனர்.

திருப்பூர் பூம்புகார் நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவர் பார்வையற்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்துள்ளார். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. எங்களுக்கு உதவ வேண்டும் என்று தனது மனைவியுடன் வந்து கூட்டத்தில் மனு கொடுத்தார்.

கந்துவட்டிக்கொடுமை

அவினாசி அருகே தெக்கலூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நாங்கள் 85 வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும் 3, 4 குடும்பத்தினர் இட நெருக்கடியில் உள்ளனர். எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

க.பெரியபாளையம் கோவிந்தம்பாளையத்தை சேர்ந்த சோமசுந்தரம் அளித்த மனுவில் மொரட்டுப்பாளையத்தை சேர்ந்த பெண்ணிடம் ஏலச்சீட்டு பணம் எடுத்தேன். இதற்காக வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார். ரூ.28 ஆயிரத்துக்கு என்னிடம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வட்டியுடன் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தற்போது ரூ.2½ லட்சம் கேட்டு மிரட்டுகிறார்கள். கந்து வட்டிக்கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அரசு நிலம் விற்பனை

பல்லடம் மாதப்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சிலர், அரசின் பொது பயன்பாட்டுக்கு உள்ள நிலத்தை ஊராட்சி அதிகாரிகள் துணையுடன் கூலித்தொழிலாளர்களுக்கு விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். நீர்த்தடம், வண்டிப்பாதையை கூட ஆக்கிரமித்து பட்டா வாங்கிக்கொடுப்பதாக கூறி வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அரசு நிலங்களை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திருப்பூர் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த அபுதாகீர் (27) என்பவர் அளித்த மனுவில், பல்லடம் சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையத்தில் தார் சாலை அமைக்கும் கலவை உற்பத்தி தொழிற்சாலை கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்பட்டது. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதித்தனர். இந்தநிலையில் எங்கள் நிறுவனத்தின் அருகிலேயே மற்றொரு ஆலையை தனியார் ஒருவர் அமைத்துள்ளார். அதன்பிறகு எங்கள் தொழிற்சாலை செயல்பட அதிகாரிகள் லஞ்சமாக பணம் கேட்டனர். இந்நிலையயில் எங்கள் தொழிற்சாலைக்கு அனுமதி மறுத்து அதிகாரிகள் சமீபத்தில் பூட்டி சீல் வைத்துவிட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கழிவுநீர் குட்டை

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், குருவாயூரப்பன் நகர் பகுதியில் சக்தி நகரில் வீட்டுமனை வாங்கி குடியேறியுள்ளனர். தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சுற்றிக்கைப்படி, சம்பந்தப்பட்ட இடத்தில் மற்றவர்கள் யாரும் ஆவணப்பதிவு மேற்கொள்ள தடை செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரிய இடத்தை தவிர, மற்ற பகுதிக்கு தடை பொருந்தாது. ஆனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மொத்தமாக ஆவணப்பதிவு மறுக்கப்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளனர்.

மனித நேய மக்கள் கட்சி, த.மு.மு.க.வினர் அளித்த மனுவில், பல்லடம் நகராட்சி அண்ணா நகரில் உள்ள குட்டையில் கழிவுநீரும், மழைநீரும் சேருகிறது. மழைக்காலத்தில் அந்த குட்டைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. கழிவுநீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குட்டையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்