'தினத்தந்தி' புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2023-02-26 20:30 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி'க்கு நன்றி

நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டியில் பிரதான சாலை சேதம் அடைந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இதுதொடர்பாக 'தினத்தந்தி'யின் புகார்பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர். இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் 'தினத்தந்தி'க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

-பொதுமக்கள், சிலுக்குவார்பட்டி.

விபத்து ஏற்படுத்தும் ஜல்லிக்கற்கள் 

பழனி நகரில் தாராபுரம் சாலை, உடுமலை சாலை ஆகியவை முக்கிய சாலைகளாக உள்ளன. இதில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உடுமலை சாலை, தாராபுரம் சாலை சந்திப்பு பகுதி உள்ளது. இங்கு சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கிறது. இந்த சந்திப்பு, வளைவு பகுதி என்பதால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் கிடக்கும் ஜல்லிக்கற்களால் தொடர் விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-பொதுமக்கள், பழனி.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஊத்துப்பட்டியில் இருந்து சின்னமநாயக்கன்கோட்டை இடையேயான சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த சாலையை தோண்டி போட்டனர். மேலும் சாலையோரத்தில் கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது சாலை சீரமைப்பு பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

-கிராம மக்கள், சின்னமநாய்க்கன்கோட்டை.

வீணாகும் குடிநீர்

திண்டுக்கல்-நத்தம் சாலையில், வாழைக்காய்பட்டி பிரிவு அருகே சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக ஓடுகிறது. விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இதுபோன்று தண்ணீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-லோகேஷ், குள்ளனம்பட்டி.

பயணிகள் நிழற்குடை பரிதாபம்

சின்னமனூர் ஒன்றியம் கிழக்கு அப்பிபட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடை மது பாராக மாறி விட்டது. பயணிகள் நிழற்குடைக்குள் அமர்ந்து மது குடித்து விட்டு, பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். மேலும் அங்கேயே அசுத்தம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரவி, அப்பிபட்டி.

சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

தேனி மாவட்டம் பெரியம்மாபட்டி ஊராட்சி கரிக்காரன்புதூரில் புதிதாக சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-மதன்குமார், கரிக்காரன்புதூர்.

விபத்து அபாயம்

பழனி-திண்டுக்கல் சாலையில் இருந்து மேற்கு ஆயக்குடி குறிஞ்சிநகர் 3-வது தெருவுக்கு செல்லும் பாலம் உள்ளது. இந்த பாலத்தை விட சாலை மிகவும் பள்ளமாக இருக்கிறது. அதை சரிசெய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி பாதசாரிகளும் தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையில் இருந்து பாலத்துக்கு சாய்வாக சாலை அமைக்க வேண்டும்.

-மணிமாறன், குறிஞ்சிநகர்.

பஸ் சேவை தொடருமா?

ஆண்டிப்பட்டியில் இருந்து வருசநாடு கிராமத்துக்கு தினமும் மாலை 5 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்சின் நேரத்தை 6 மணியாக மாற்றியதோடு, மயிலாடும்பாறை வரை மட்டுமே இயக்குகின்றனர். இதனால் வருசநாடு கிராம மக்கள் மயிலாடும்பாறையில் இறங்கி நீண்டநேரம் காத்திருந்து வேறுபஸ்சை பிடித்து செல்லும் நிலை உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே வருசநாடு வரை பஸ் சேவையை நீட்டிக்க வேண்டும்.

-பொதுமக்கள், வருசநாடு.

காலணி பாதுகாப்பு அறை

கம்பம் கவுமாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் காலணிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வசதி இல்லை. இதனால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே காலணி பாதுகாப்பு அறை வசதி ஏற்படுத்தி தர இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயபாண்டியன், கம்பம்.

======

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்