பஸ் நிலையத்திற்குள் நாய்கள்
ராமநாதபுரம் நகர் புதிய பஸ் நிலையத்தின் உள்ளே கால்நடைகள், நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. அவ்வப்போது இவை பஸ்சின் அடியில் படுத்து கொள்வதால் சக்கரத்தில் சிக்கி காயமடைகிறது. மேலும் இரவு நேரங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளை இவை அச்சுறுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
விபத்து அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தில் உள்ள மின்விளக்குகள் அவ்வப்போது பழுதடைந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் போதிய வெளிச்சம் இன்றி சிறு, சிறு விபத்துகளில் சிக்குகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தில் உயர் தர விளக்குகளை பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெஸ்டின், பாம்பன்.
சுற்றுச்சூழல் மாசுபாடு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையோரம் பிளாஸ்டிக் குப்பைகள், ரப்பர் டயர்கள் முதலியவை அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குள்ள குப்பையை அகற்றி அதனை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அலெக்ஸ், கீழக்கரை.
தார்ச்சாலை அமைக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 6வது வார்டில் உள்ள சாலைகள் சேதமடைந்து மண்ரோடாக காட்சியளிக்கிறது. சிறு மழைக்கே சாலையானது சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்து, முதுகுளத்தூர்.
எச்சரிக்கை பலகை வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இந்த சாலைகளில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.. பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலைகளில் எச்சரிக்கை பலகை அமைத்து வாகனஓட்டிகளை கண்காணிக்க வேண்டும்.
பாலகுரு, கமுதி.